July 14, 2016

நியாயமாரே..

எனக்கு அப்போது பதினேழு வயதிருக்கும்.பள்ளிக்கூடத்துக்கு போகாம வெட்டியாக சுத்திக் கொண்டிருந்ததால் பல நிர்பந்தங்களுக்கிடையில் கேரளாவிற்கு சித்தாள் வேலைக்குச் செல்ல பணிந்திருந்தேன்.வெற்றிகரமாக ஒரு மாதம் வேலையும் செய்து முடித்துவிட்டேன்.அந்நிலையில் ஒருநாள் ஓர் பழைய வீட்டிற்கு பழுது நீக்கும் பணிக்காக நாங்கள் இருவர் சென்றோம்.வேலையின்போது என் கவனக்குறைவால் அங்கிருந்த வேலைப்பாடு மிக்க மண் ஜாடியை உடைத்துவிட்டேன்.நான் அதிர்ச்சியில் உறைந்திருக்க அதற்கு மேல் அதிர்ச்சியாகி என் கொத்தனார் என்னை திட்டிக்கொண்டிருந்தான்.சத்தம் கேட்டு அறையை விட்டு வெளியே வந்த மலையாளியான முதலாளி..சம்பவத்தை பார்த்தவுடன் சாரமில்லடோ அவனை சீத்த பறையல்லே என எனக்காக பரிந்தார்..ஒரு சில முணுமுணுப்புடன் கொத்தன் நடக்க பின்னே தலை கவிழ்ந்தபடி நானும் நடந்தேன்..அந்நேரத்தில் வெளியே ஆட்டோ ஒன்று வந்து நிற்கும் சத்தம் கேட்டது.சிறிது நேரத்தில் நாங்கள் வேலை செய்யும் இடத்தை ஆட்டோவில் வந்திறங்கிய மேஸ்த்திரி அதாவது கண்ராக் வந்தடைந்தார்..வரும்போதே உடைசலை வெளியே கொண்டுபோன வீட்டுக்காரை பார்த்திருப்பார் போல..லேய் அது எப்படிலே உடைஞ்சி என கொத்தநாரைப் பார்த்து கேட்டார்.நான் கொத்தநாரின் முகத்தை இன்சூரன்ஸ் இல்லாமல் மாட்டிய பைக்காரனின் கெஞ்சல் முகத்தோடு பார்த்துக்கொண்டிருந்தேன்.இந்த பயதான் உடைச்சான் என யோசிக்காம உடனே போட்டுக்கொடுத்துட்டான்.இதற்கு முன்னரும் இதேபோல் உடைதலும் சரிதலும் எனக்கு சகஜம் என்பதால் எல்லாவற்றிர்க்கும் சேர்த்து வண்டை வண்டையா திட்டினார் மேஸ்த்திரி.அன்று பதினேழு வயது வாலிபனென்று இறுமாந்து அலைந்து கொண்டிருந்த நான் அழுதுகொண்டிருந்தேன்.மாலையில் வேலை முடித்து வரும்போது நான் கொத்தநாரிடம் அண்ணா வீட்டுக்காரரே அந்த ஜாடி ஒடஞ்சதுக்கு சாரமில்லைனு சென்னாரு நீ யாமண்ணா கண்ராக்கிட்ட நான் ஒடைச்சேன்னு சென்ன என பரிதாபமாக கேட்டேன்.கொத்தன் ஒத்த வரியில் சொன்னான் நான் கள்ளம் செல்லமாட்டேம்பிலேன்னு..ு.அவ்வளவுதான் நான் அதற்கு பின் பேசவேயில்லை.இப்படி ஒரு வாரம் கடந்திருக்கும்.நாள்தோறும் இரவில் மூன்று நான்குபேர் அமர்ந்து அறையில் சீட்டு விளையாடுவது வழக்கம் .அன்றும் அதேப்போல் விளையாடிக்கொண்டிருந்தார்கள்.நான் வழக்கம் போல் வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருந்தேன்.ஆட்டம் இறுதிக்கட்டத்தை நெருங்கிக் கொண்டிருக்கையில் எதேச்சையாக என் எதிரி கொத்தனை கவனிக்கையில் அவன் உருவியது எத்தனை சீட்டு என்றும் தெரியாது. அவனிடம் எத்தனை சீட்டு இருக்கிறது என்றும் தெரியாது.ஆனால் அவன் களத்தில் ஒரு சீட்டு இடுவதற்கு பதிலாக இரண்டு சீட்டுகள் இட்டிருந்தான்.இது அப்பட்டமான ஏமாற்று .இதை நான் உடனே சொல்லியிருந்தால் பெரும்சண்டையே நடந்திருக்கும்.அல்லது நான் பொய் சொல்வதாக கூறி என் நொங்கை கொத்தன் எடுத்தாலும் எடுத்திருப்பான்.எதற்கு வம்பென்று நான் அமைதியாகிவிட்டேன்.அன்று இரவு மன உழச்சலிலேயே உறங்கினேன்.இந்த ஏமாற்றை மறுநாள் எப்படியும் கொத்தனிடம் கேட்டுவிட வேண்டுமேன தீர்மானித்துக்கொண்டேன்.மறுநாள் காலையில் ஆத்துக்கு குளிக்க போகும்போது கொத்தனுடன் ஒட்டிக்கொண்டேன்.அண்ணா நீ கள்ளம் செல்லமாட்ட அதுஇதுன்னு அண்ணைக்கு சென்ன.ஆனா நேத்து சீட்டு விளையாடம்ப எத்தனதடவ இரண்டு சீட்டு போட்ட ரெண்டு சீட்டு எடுத்தன்னு எனக்கு தெரியும்.ஏதோ பாவம்பாத்து அவியள்ட்ட செல்லேல சென்னா என்ன நடக்கம்னு தெரியமில்ல என மென்மையாக மிரட்டினேன்.ஊம்பி துப்பிருவானுவ போல உனக்க வேலைமயிரைப் பாத்துட்டு என கொத்தன் எகிறினான்.எனக்கும் எகிற ஆசைதான் என்ன பண்றது ஆளில்லாத இடம் வேற அவன் அடித்தானென்றால் தடுத்து நிறுத்துவதற்கும் ஆள் கிடையாது. அதனால் அமைதியாக போய்விட்டேன்.அங்கு ஒருசில வாரங்கள் கூட வேலை செய்துவிட்டு நான் வீட்டுக்கு வந்துவிட்டேன்.ஒருமாதம் கடந்து எங்க ஊர் கடைத்தெருவில் என் கொத்தனைப் பார்க்கிறேன் .தலையில் பெரிய கட்டோடு நின்று கொண்டிருந்தான்.என்னண்ணா ஆச்சி என பொய்யான அதிர்ச்சியோடு கேட்டேன்.அந்தோணிக்க பய குடிச்சிட்டு முழக்கோலெடுத்து அடிச்சி போட்டான் என சொன்னான்.நானும் ஒருசில நிமிடங்கள் நடித்துவிட்டு அங்கிருந்து நகர்ந்து விட்டேன். பிற்பாடு வந்த தகவல்கள் இவை ...மண்டை உடைந்தது உண்மை ஏழு தையல்கள் போட்டது உண்மை,தாக்கிய ஆயுதம் முழக்கோல் வரை உண்மை. ஆனால் உடந்ததற்கான காரணம் பொய்...அவன் பொய்யினால் அடிவாங்கினான் என்பதே எனக்கு சந்தோசமாக இருந்தது.அடிநடந்தது என்னவோ சீட்டு விளையாட்டுக் களத்தில்தான் ஆனால் இம்முறை இரண்டு சீட்டு போட்டது என் கொத்தனல்ல.அடித்த அந்த அந்தோணி மகன்தான் பொய்யன்.பாவம் என் கொத்தன் நியாயம் கேட்கப் போனார் நியாயமானதை வாங்கினார்...
.
நியாயமாரே...

July 5, 2016

மரம் வளர்ப்போம்...எங்காவது..

நாங்கள் இரண்டு பேர் மரம் வளர்ப்பதைப் பற்றியும் சில திருமண வீடுகளில் வாழ்த்த வருவோர்களுக்கு மரக்கன்றுகள் அன்பளிப்பாக தருவதுபற்றியும் சின்ன விவாதத்தில் உழன்று கொண்டிருந்தோம்.அப்போது பேச்சுவாக்கில் நம்மளால நிறைய மரக்கன்றுகள் நட்டு பாதுகாக்க முடியவில்லையென்றாலும் நம் தெருவில் ஒரு மரமாவது நட்டு பாதுகாக்க வேண்டும் என நண்பர் ஆதங்கப்பட்டுக்கொண்டார்.நானும் பதிலுக்கு நாடோடி மாதிரி சுற்றிக்கொண்டிருக்கும் வாழ்கையில் இதல்லாம் எங்கண்ணே சாத்தியம் என்று குறைபட்டுக்கொண்டேன்.இப்படி எங்கள் உரையாடல் நொடிகளை கடந்துகொண்டிருக்க திடீரென அருகாமை கட்டிலில் படுத்துக்கிடந்த பெரியவர் (சுமார்50 வயதிருக்கும்.)என்னல பேசுதிய எனக்க வீட்டுக்ககிட்ட ரோட்டுல அவ்வளவு இடம் கிடக்கே சைடுல கொஞ்சம் மரம் வைப்போம்னு வச்சா ஊருகாரப்பயலுவ அடிக்க வாறானுவ.இதுல மரம் வளர்ப்பாம் பாதுகாப்பாம் போங்கலே..என்றுவிட்டு மீண்டும் படுத்துவிட்டார்.நான் கோபமாக அவர் ஊர்காரர்களுக்கு ஓர் கெட்டவார்த்தையை தந்துவிட்டு எப்படிணே அது நம்ம பாதுகாப்புக்கு மரம் வைக்க எவன்ட்டண்ணே அனுமதிவாங்கணும் என
ஆஊவென கத்திவிட்டு எத்தனை மரம்ணே வச்சீங்கன்னேன்.ஆறு மரம் வச்சேம்பா என்றார். பரவாயில்லையே சூப்பர்ணே என்ன மரம்ணே வச்சீங்க..ஆறும் வாழைமரம்தான் தம்பி என்றார்...எனக்கு கிர்ர்ர்ருனு மண்டையில் ஏதோ ஏறியிச்சு ஒண்ணும் சொல்லாம சிகரட் பாக்கட்டை எடுத்துட்டு வெளியே வந்துட்டேன்..என்கூட பக்கத்துல இருந்தவர் சிரிப்புசத்தம் மட்டும் முதுகுப்பக்கம் கேட்டுட்டே இருந்துச்சு...
.
பிராணவாயுக்காக மரம் வைக்கிறதைப்பற்றி பேசிட்டு இருந்தா..பக்கி ரோட்டுல விவசாயம் பண்ண முயற்சி செய்துவிட்டு முடியல்லன்னதும் கோபமா வேறபேசுது....
.
எல்லாம் என் கூட்டுக்கட்டு..

March 13, 2016

கோடைமழை விமர்சனம்

கோடைமழை விமர்சனம்..
.
நல்ல படம் என்பதற்கான உதாரணம் காட்ட வேண்டுமானால் கோடைமழையை தயங்காமல் முன்மொழியலாம்.எந்தவொரு முகம் சுளிப்புக்கும் இடந்தராமல் இயக்கிய இயக்குநருக்கு கம்பீர மரியாதை.கதை என்றுப்பார்த்தால் யதார்த்தம் .அவ்வளவுதான்.நம்மைச் சுற்றியுள்ள யதார்த்தத்தை அதாவது நாம் அறிந்திராத சுற்றுப்புறத்தை காட்சிப்படுத்தியிருக்கிறார் என்றும் சொல்லலாம்.இந்த திரைப்படத்தில் வில்லனே இல்லையென்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.சூழ்நிலையை மட்டுமே வில்லனாக்கியுள்ளார் இயக்குநர் .அதிரடியை தவிர்த்து மற்ற அனைத்து மசாலாக்களையும் புகுத்தியிருக்கிறார் இயக்குநர்.குறிப்பாக நகைச்சுவைக் காட்சிகளை நாம் இனி சின்னத்திரையில் அடிக்கடி காணலாம். கலக்கல் நகைச்சுவை துளிகள் பல உண்டு கோடைமழையில்.
அடுத்ததா ஒளிப்பதிவு மிக அருமை .பொட்டல்வெளியையும் ஊட்டி பொட்டானிக்கல் கார்டன் மாதிரி ரசிக்க வைத்த பெருமை ஒளிப்பதிவாளரையே சேரும்..
ஒரு சாலையின் வளைவு கூட அற்புதமாக படமாக்கப்பட்டிருக்கிறது.ஒலிப்பதிவையும் மெச்சியாகவே வேண்டும்.சிறு சப்த்தங்களுக்கும் பிரத்தியோக கவனம் கொண்டு வடிவமைத்திருக்கின்றனர்.திரையில் கன்னத்தில் விழும் ஒவ்வொரு அடியும் என் கன்னத்தில் விழுந்தது போலவே உணர்வு காரணம் தத்ரூப ஒலிப்பதிவுதான்.
.
சமீப காலமாக இவ்வளவு அருமையான கிராமிய மணம்கொண்ட பாடல்களை கோடைமழையில்தான் கேட்கிறேன். வைரமுத்துவின் வரிகள்னா சும்மாவா அற்புதம்.வரிகளுக்கேற்ப பின்னணிகோர்ப்பும் அதே அற்புதம். அது இசையாக இருந்தாலும் சரி காட்சியமைப்பாக இருந்தாலும் சரி.
.
நடிகர்களைப்பத்தி சொல்ல வேண்டுமென்றால் எலோருமே பொருத்தமான தேர்வுதான்.குறிப்பாக நாயகி ப்ப்பா என்னா அழகு.கூடவே நடிப்பும் அழகுதான் .இன்னும் சொல்லலாம்தான் வேண்டாம் எனக்கு வெக்கம் வருது..
.
இந்த திரைப்படம் மூலம் இயக்குநர் சொல்லவருவது கண்மூடித்தனமான கோபம் கொண்டுச்செல்வது பிறருக்கான இழப்பாயினும் அதைவிட பேரிழப்பு நமக்கும் வந்துத்தங்குமென சொல்லிச் செல்கிறார்.ஒரு திறமையான மற்றும் அழகியல் சார்ந்த இயக்குநராக கதிரவன் தமிழ் திரையுலகிற்கு கிடைத்திருக்கிறார்.வாழ்த்துகள். ஆனால் அவர் சிறந்த கதைசொல்லியா என்றால் ஆம் என்பதற்கு ஒரு மாற்று குறைவே என்பதாகத்தான் என்னால் மதிப்பிடமுடிகிறது.

கண்டிப்பாக ஒரு நல்லத் திரைப்படத்தைப் பார்த்த திருப்தியை கோடைமழை தரும்..

November 15, 2015

நட்பு....

நேற்று நண்பர் ஒருவரோடு சின்ன மனகசப்பு உண்டாகிவிட்டது.தவறு அவர்பேரில் என்பதால் நான் அதிகப்படியான ரோசத்தோடே இன்று மாலைவரை நடந்துகொண்டேன்.அப்படியே இரவும் வந்தது.நான் வேண்டா வெறுப்பாக வேடிக்கை பார்ப்பதில் கவனத்தை செலுத்த முயற்சித்துக் கொண்டிருக்கையில் என்னருகே வந்த நேற்றைய நண்பர் ,எனக்கு இப்போ பாதிதான் தேவைப்படுது அதுக்குமேல போனா வீட்டுக்கு போறது கடினமாகிவிடும் அதனால் நாம இரண்டுபேரும் பகிர்ந்து கொள்ளலாமே என்றார்.எனக்கு பழைய ரோசம் அப்படியேதான் இருந்தது எனினும் அவருக்கு என்னிடம் வெறுப்பு இல்லை என்பதை அறிந்துகொண்டதால் அல்லது அவர் மீண்டும் நெருங்கிவர முற்படுவதால் நானும் உங்களுக்கு அவ்வளவு தேவையில்லையென்றால் நானும் அதில் பங்கெடுத்துக்கிறேன் என சொல்லி நூற்றி முப்பதில் என் கோபத்தையும் ரோசத்தையும் கழுவினேன்.
.
இப்போது இதை எதுக்கு சொல்றேன்னா கோபத்தை நீட்டிக்க பலவாய்ப்புகள் உண்டானால் குறைக்க அல்லது இல்லாமலாக்க சில வாய்ப்புகளேனும் உண்டாகலாம் அதை நாம் பயன்படுத்துவதில்தான் நாளைய நம் நட்புகளின் இணக்கம் உறுதியாகிறது..
.
பின்குறிப்பு..
பாதிக்காக இவன் வியாதி வந்தவன்போல் மாறிப்போனதாக நீங்கள் நினைத்தால் கம்பனி பொறுப்பேற்காது....

April 7, 2015

பொங்கும் செம்மரம் ...

ஆந்திராவில் செம்மரக் கடத்தலில் ஈடுபட்ட இருபது பேர் சுட்டுக்கொலை .அதில் சுமார் பனிரெண்டு பேர் தமிழர்களாம் .அதனால் சிலபல மனித உரிமை ஆர்வலர்களும்.சமூக போராளிகளும் இந்த அநியாயத்திற்கு எதிராக குரல் கொடுத்துக்கொண்டிருக்கிறார்களாம்.தவறு எவர் செய்தாலும் தவறுதான் அதில் கூடுதல் குறைவு என்ற வாதத்திற்கே இடமில்லை .அதனால் தமிழன் தவறு செய்தால் தவறு சரியாகாதுதானே .அப்படி இருக்கையில் ஒரு அரசின் எச்சரிக்கையையும் அவமதித்து அங்கு கண்காணிப்புக்கு இருந்த அதிரடிப்படை வீரர்களுக்கும் கட்டுப்பட மறுத்தவர்களை தாக்குவதை தவிர வேறு உபயம் இருந்திருக்க முடியாது .துரதிர்ஷ்டவசமாக இருபது பேர் மரணித்தது வேதனைக்குரியதுதான் .இங்கு திருட்டு பெரிய குற்றமல்லதான் .ஆனால் தேசத்துரோகம் பெரிய குற்றம்தானே ..அரசையும் இயற்கையையும் மதிக்காதவர்களுக்கு இந்த சம்பவம் ஒருபாடமாக அமையலாம் .நம்ம ஊர்ல இந்த பிக்பாக்கட் அடிக்கிறவன் ,தாலி அறுப்பவன்,வீடேறி திருடுபவன் இவர்களல்லாம் தங்கள் வயிற்றுக்காகவும் வாழ்க்கைக்காகவும்தான் திருடுகிறார்கள். அவர்களும் தமிழர்கள்தான் .ஆகவே எதிர்பாரமால் அகப்பட்டுவிட்ட திருடனை அவன் உடல் நோகாமல் காவல் துறையினரிடம்  ஒப்படைத்துவிடுவீர்காளா ...?மரண அடி கொடுத்தல்லவா காவல் துறையினரிடம் ஒப்படைப்போம் ...நம் மனித நேயம் அப்படி இருக்க எங்கோ நடந்த சம்பவத்திற்கு போராளி என்ற பெயரில் நம்மை விளம்பரப்படுத்திக்கொண்டிருக்கிறோம் ..காரணம் தமிழன் தாக்கப்பட்டானாம் .நாம் பொறாமையோடு எதிர்கொள்ளும் அடுத்த வீட்டுக்காரனும் தமிழன்தான் அவர்களுக்கு ஏதேனும் அசம்பாவிதம் நிகழ்ந்தால் ஏன் நம் நெஞ்சு இவ்வளவு பொங்குவதில்லை .காரணம் வீம்பு ,கர்வம் ,எரிச்சல் போன்ற இத்யாதி இத்யாதி சமாச்சாரங்கள்தான் .எப்போதும் நாம் கண்ணுக்கு தெரியாதவனை மட்டும்தானே  கொண்டாடுவோம் .அதுபோல் கண்ணில் அகப்படாமல் தொலைவில் உள்ளவன் பெயரிலும் பரிவு கொள்கிறோம் .அந்தப் பரிவு ஒரு விளம்பரத்துக்காக மட்டும் இல்லாமல் இருப்பது வரை நல்லது ...
.
.
தோன்றியது  ...